பில் கேட்ஸ் 1955ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சியாட்டில் மாகாணத்தில் பிறந்தார். அவரது தந்தை வில்லியம் ஹென்றி கேட்ஸ் வழக்கறிஞரராக பணிபுரிந்து வந்தார். அவரது தாய் மேரி மேக்ஸ்வெல் கேட்ஸ் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். சிறு வயதிலேயே பில் கேட்ஸ் கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கினார், வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதிலேயே அவருக்கு இருந்தது. அவரது 13வது வயதில் தனது பள்ளியில் இருந்த கணிணியில் பேசிக் கணினி மொழியில் ப்ரோக்ராம்கள் எழுத துவங்கினார், அவர் எழுதிய முதல் ப்ரோக்ராம் டிக் டாக் டோ என்ற விளையாட்டை கணினியில் விளையாட வழி செய்து கொடுத்தது. கணிணி துறையில் இவரது ஆர்வத்தை கண்ட ஆசிரியர்கள் இவரை கணித வகுப்பு நேரங்களில் சிறப்பு அனுமதி கொடுத்து கணிணியில் பயிற்சி பெற அனுமதித்தனர்.
பள்ளியில் படிக்கும்போது பில் கேட்ஸும் அவரது நண்பர்களும் கணிணியிலுள்ள இயங்குதளத்தில் காணப்பட்ட சில குறைபாடுகளை பயன்படுத்தி எல்லா மாணவர்களுக்கும் அளிக்கப்படும் நேரத்தை விட அதிக நேரத்தை கணிணியில் செலவிட்டனர். ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை கண்டுபிடித்த பள்ளி நிர்வாகம் அவர்களை கணிணி பயன்படுத்த தடை விதித்தது. பள்ளியில் கணிணி பயன்படுத்த தடை விதிக்கபட்டபோதும் பில் கேட்ஸும் அவரது நண்பரான பால் அலனும் கணிணி கற்று கொள்ளும் ஆர்வத்தினால் பள்ளிக்கு வெளியில் கணிணி சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கி படித்து தங்கள் கணிணி அறிவை பெருக்கி கொண்டனர்.
கணினியில் புரோக்ராம்மிங் கற்று கொள்வதில் இவர்களுக்கு தனி வெறியே ஏற்பட்டுவிட்டது, இதனால் இவர்களுக்கு இரவு, பகல், பாராமல் கடும் கணிணி பயிற்சியில் இருவரும் ஈடுபட்டனர். நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் ப்ரோக்ராம்மிங் மொழிகளை உருவாக்க பில் ஆர்வம் கொண்டான். சுருக்கமாக சொன்னால் கணினியால் இருவரும் புகுந்து விளையாடிப்
புதுமைகள் காண விரும்பினர். பில்லும், பாலும் பல்கலைக்கழக இளைஞர்களின் ஸி.ஸி.ஸி நிறுவனத்துடன் இணைந்து கொண்டார்கள். இவர்கள் அவர்களைவிடச் சிறியவர்களாக காணப்பட்டமையால் இவர்களின் திறமையில் நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனாலும் பில்லுக்கும், பாலுக்கும் மீண்டும் நீண்ட நேரம் கணினியை பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்தது.
கணிணி கனவுகள்:
பள்ளி கல்வியை முடித்த பிறகு மேல் படிப்பை தொடர்ந்து தந்தையைப் போல் வக்கீலாகி விட வேண்டும் என்று குடும்பத்தினரும் உறவினர்களும் வற்புறுத்தினர். ஆனால் பில்லின் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட கணிணி கனவுகள், கணிணி புரோக்ராம்மிங்கையே சுற்றி சுற்றி வந்தன. பில்லும், பாலும் அங்கு உள்ளவர்களை விடத் திறமையாக நேரம் காலம் பாராது வேலை செய்த போதும் அவர்களுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்குரிய சம்பளமே வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் பணத்திற்காக அங்கு வேலை செய்யவில்லை. கணினியில் வேலை செய்யும் வாய்ப்புக்காக அந்த பணியை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதில் வெற்றி கண்டனர். இதன் பின்னர் பள்ளி இறுதித் தேர்விலும் சிறப்பாக வெற்றி பெற்றார் பில். ஆனால் பால் பள்ளி கல்விக்கு முழுக்குப் போட்டுவிட்டான். மேலும் பில் பெற்றோர்களின் விருப்பத்திற்கு இணங்க வக்கீல் கல்வியை அவரால் தொடர முடியாத நிலையில் இடைநிறுத்தினார்.
அதன் பின்னர் பில்லும் பாலும் ஒரு கணினி நிறுவனத்தை ஆரம்பிப்பது பற்றி கனவு காண்பார்கள். திட்டம் தீட்டுவார்கள். விவாதிப்பார்கள்.ஆனால் நிதி நெருக்கடியினால் அவர்கள் திட்டத்தை தள்ளிப் போட்டு விட்டார்கள். ஆனால் அவர்களிடம் ஆசை இருந்தது ,ஆற்றல் இருந்தது. அறிவு இருந்தது. அனுபவமும் கூடவேயிருந்தது .காலம் மட்டும் கனியவில்லை. 1974 ம் ஆண்டு இன்டெல் நிறுவனம் புதியதோர் மைக்ரோப்ராசெசரை அறிமுகம் செய்தது. அதன் புரோக்ராம்மிங் பணிக்கு அந்த நிறுவனம் பில்,பால் இடமும் உதவியை நாடியது. இச்சந்தர்ப்பத்தைச் சரியாக பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் கோபால், போர்ட்ரான், பாஸ்கல் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற அவர்கள் பேசிக் கணிணி மொழியில் புரோக்ராம்கள் எழுத ஆரம்பித்தனர்.
ஆனால் இப்பணியை விரைவாக முடிக்க வேண்டும், பிழையின்றி முடிக்க வேண்டும், மற்றவர்களை முந்திக்கொண்டு முடிக்க வேண்டும், சரியாக முடிக்க வேண்டும் என்று எண்ணினார்கள். இல்லாவிட்டால் தமது இரவு பகல் பாராது உழைத்த கடினமான உழைப்பு பயனற்றுப் போய்விடும் என்று எண்ணினார்கள். இவர்களின் விடாமுயற்சியினால் எழுதப்பட்ட புரோக்ராம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. அந்த முயற்சி வெற்றி கண்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த பில்லின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அப்போது பில்லுக்கு இருபது வயது. இந்த வெற்றியின் திருப்பு முனை அவர்களை உலகறியச் செய்தது.
மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யம்:
1977 ஆம் ஆண்டு ஆல்புகர்க் நகரின் மிகப் பெரிய அடுக்கு மாடிக் கட்டடத்தின் எட்டாவது மாடியில் ஒரு அறையில் இவர்கள் நிறுவனத்தை ஆரம்பித்தனர். அந்த அறையில் அங்கும் இங்குமாகக் கணினிகள் கிடந்தன. விசை பலகைகளில் சில விரல்கள் விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் டைப்ரைட்டரில் அமர்ந்து கொண்டிருந்தாள். திடீரென புயல் போல ஒரு பையன் அந்த அறைக்குள் நுழைந்து நிர்வாகியின் அறைக்குள் போய்க் கொண்டிருந்தான். ஹலோ ..ஹலோ ..யாரது? முதலாளி ஊரில் இல்லை என உரக்க குரல் கொடுத்தார். ஏனெனில் வெளியார் யாரும் அந்த அறைக்குள் நுழையக் கூடாது என்பது உத்தரவு. அவனோ அறையில் அமர்ந்து கணினியில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். அந்தப் பெண் புதிதாக நியமனம் பெற்றவள்.அவள் வேகமாக தனது அலுவலகரை நோக்கிச் சென்று சார் யாரோ ஒரு பையன் .. அவள் முடிக்கவில்லை அவர் சிரித்தபடி பையனா? அவர் தான் இந்தக் கம்பனியின் முதலாளி பில்கேட்ஸ் என்றார். அந்தப் பெண்ணின் விழிகள் வியப்பில் விரிந்தன.
இருபது வயது இந்த சின்ன பொடியன் இக் கம்பனியின் முதலாளியா? நம்பவே முடியவில்லை? ஆனால் உண்மை அதுதான். அச்சிறிய கம்பெனி மைக்ரோசாப்ட் (Microsoft) என்ற பெயருடன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது. இன்று உலகமே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு மைரோசாப்ட்டின் இயங்கு மென் பொதிகளும் ,பிரயோக மென்பொதிகளும், புரோக்கிராம் மொழிகளும் , அனைத்துக் கணினிகளிலும் விரும்பிப் பயன்படுவதை அனைவரும் அறிந்ததே. இவ்வெற்றிக்கு பில்கேட்சின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் மைக்ரோசாப்ட் உத்தியோகஸ்தர்களின் அயராத உழைப்பும் காரணம் என்றால் மிகையாகாது. இதனாலேயே மைக்ரோசொப்ட் உலகெங்கும் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது.
இதற்கிடையில் பில்கேட்ஸ் எந்தக் கல்லூரியிலும் பட்டம் பெற்றவர் அல்ல. அவருக்குப் பட்டப் படிப்போ, பட்டயப்படிப்போ முக்கியமானதாகத் தெரியவில்லை. கணினி மொழியில் அவர் கொண்டிருந்த ஆர்வமும் விடாமுயற்சியும் அவரை இன்று உலகம் அறிய வைத்தது. தனது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் திறமை மதிப்பிடப்பட்டு திறமைக்கேற்றவாறு ஊக்குவிப்பு பரிசில்கள் ,சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் போன்றவை வழங்கப்பட்டு வருவது சிறப்பம்சமாகும். கடினமாக, தீவிரமாக ஆற்றலையும் வெளிப்படுத்தி வேலை செய்ய முடியாதவர்களை இந்த இடம் உங்களுக்கு ஏற்றதல்ல என்று சொல்லி வெளியே அனுப்பிவிடுவாராம்.
குடும்பம்:
பில்கேட்சிடம் உள்ள ஒரு நல்ல அம்சம் தொழிலாளர், நிர்வாகி, முதலாளி என்ற இரும்புத் திரைப் பிரிவு வேறுபாடுகள் இல்லை. எல்லோரும் கலந்து பழகலாம், ஆலோசனை வழங்கலாம் . மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய மெலிண்டா பிரெஞ்ச் என்ற பெண்ணை நேசிக்கத் தொடங்கினார். கண்டதும் காதல் என்று கொள்ளாது ஐந்து வருடங்களுக்கு மேலாக நெருங்கிப் பழகிய பின்னர் அந்த நட்பு காதலாக மலர்ந்தது. அவள் அழகைவிட அறிவால், உழைப்பால் உயர்ந்தவள், சுறுசுறுப்பானவள், கலகலப்பான இயல்பு உடையவள். 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் நாள் இருவரும் புது மணவாழ்வில் இணைந்து கொண்டனர். இவர்களுக்கு 1996 இல் ஒரு மகளும் 1999 இல் ஒரு மகனும் பிள்ளைச் செல்வங்களாக கிடைத்தனர். ஆசைக்கொரு மகளும், ஆஸ்திக்கொரு மகனும் என்பதே பலர் இலட்சியக் கனவு இந்த வகையிலும் பில்கேட்ஸ் கொடுத்து வைத்தவரானார். அமெரிக்கக் கொடை வள்ளல்களில் மூன்றாம் இடத்தை வகிக்கிறார் பில்கேட்ஸ்.
உலகில் எல்லாக் கணினிகளிலும் மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்களே பயன்படுத்தப்படுகின்ற நிலையில் அதன் திருட்டு மென்பொருள் பயன்பாட்டை கடுமையாக எதிர்க்கின்றார் பில்கேட்ஸ் .இதனால் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னர் இவை குறைந்த மதிப்புள்ள சாதாரண சிடி களில் அனைத்து இடங்களிலும் பெறக்கூடியதாக இருந்தது. உலகில் மைக்ரோசாப்ட் மென்பொருள் மூலம் அன்றும் இன்றும் கொடி கட்டிப் பறக்கும் பில்கேட்ஸ் 1995 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்து ஒரு மணி நேரத்தில் தனது சொந்த விமானத்தில் திரும்பி விட்டார். பில்கேட்ஸ் தனது தலைமைப் பதவியை 27.6.2008ல் ஸ்டீவ் போல்மருக்கு கொடுத்துவிட்டு அந்நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்று அவரால் ஸ்தாபிக்கப்பட்ட பில் அன்ட் மெலிண்டா பவுண்டேசன் எனப்படும் சமூக சேவை அமைப்பில் அதிக நேரத்த செலவிடுவதற்கு தீர்மானித்தார்.
"தான் கணினி பாதையில் சென்ற தூரம் சொற்பம்
செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகம் "
என்று கூறுகின்றார்.