சென்னை, கோவையில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வரும் ரோபோ உணவகங்களை தொடர்ந்து அதன் கிளை பெங்களூரு நகரில் திறக்கப்பட்டுள்ளது. பெங்களூரின் முதல் ரோபோ உணவகம் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த உணவகம் இந்திரா நகரில் உள்ள நூறு அடி ரோட்டில் உள்ள ஹை ஸ்டிரீட்டில் திறக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் நூறு பேர் வரை அமர்ந்து உணவருந்த கூடிய வகையில் இந்த உணவகத்தில் இடவசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ரோபோ ரெஸ்டாரன்ட்டின் ஒவ்வொரு டேபிளிலும் ஒரு எலெக்ட்ரானிக் டேப்லெட் வைக்கப்பட்டுள்ளது. டேப்லெட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பும் உணவு வகைகளை பதிவு செய்யலாம். விருந்தினர்களிடம் ஆர்டர்களை பெற்று உணவு பரிமாற ஆறு பெண் ரோபோக்கள் கொண்ட குழு தயாராக உள்ளது. ஒவ்வொரு ரோபோவுக்கும் ஒரு பெண் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாம் விரும்பும் உணவு வகைகளை டேப்லெட்டில் பதிவு செய்த பின் அது சமையலறையில் தயாரானவுடன் ரோபோ நம் மேஜையை நோக்கி நகர்ந்து வந்து விருந்தினர்களை வாழ்த்தி விட்டு டிரேயில் அழகாக அடுக்கப்பட்ட உணவு வகைகளை எடுத்து கொள்ள சொல்கிறது.
பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ தருணங்களை கொண்டாட விரும்புபவர்கள் இங்கே உணவருந்த முன்பதிவு செய்தால் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து சொல்லும் வகையிலும் இந்த ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
உணவகத்தின் ரிசப்ஷன் பகுதியில் ஒரு அதிநவீன ரோபோ நம்மை வரவேற்று காலியாக இருக்கும் மேஜைகளை நோக்கி நம்மை வழிநடத்துகிறது, இந்த உணவகம் குறித்து நமக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அதற்கு பதிலளிக்கும் வகையிலும் இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தோ ஆசிய உணவு வகைகள் பிரதானமாக இந்த உணவகத்தில் பரிமாறப்படும். மாக்டைல் வகைகளும் இங்கு பரிமாறப்பட உள்ளதாக இந்த உணவகங்களில் உரிமையாளரான வெங்கடேஷ் ராஜேந்திரன் கூறுகிறார். ரோபோ உணவகத்தின் மேலாளர் திரு. கார்த்திகேயன் ரமேஷ் அவர்களின் சிறு பேட்டியும், டேப்லெட் மூலம் உணவு வகைகளை ஆர்டர் செய்வது பற்றிய செயல்முறை விளக்கமும் பார்க்க மேலேயுள்ள காணொளி காட்சியின் ப்ளே பட்டனை தட்டவும்.
-----------------------------------------------
-----------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------